Thursday, 15 March 2012

‘’கேட்டது (சம)வாழ்வு; கிடைத்தது சாவு!’’


"கேட்டது (சம)வாழ்வு; கிடைத்த து சாவு..!"

1950 பிப்ரவரி 11... இந்திய துணைக்கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகடனப்படுத்திய பதினோறாவது நாள்; முதல் குடியரசு தினம் கொண்டாடிய ஆண்டு. அதாவது  இந்தியாவில் சுதந்திர காற்று வீசத் தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடம் நடைபெறும் சமயம். நாடெங்கும் சுதந்திர காற்று வீசிக்கொண்டிருகின்றது. ஆனால் அந்த சுதந்திர காற்று இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் சுவாசிக்க கிடைக்க வில்லை. என்ன கொடுமை இது பார்த்தீர்களா? ஆம்! 1948-1951 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் தடைவிதிக்க பட்டு இருந்தது விடுதலை இந்தியாவில்!

விடுதலைக்காக- வெள்ளையனை விரட்டியடித்து, பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அதன் சுவடுகூட தெரியாத அளவுக்கு வேரோடு பிடுங்கி எரிந்த தேசபக்த போரில் கம்யூனிஸ்ட்கள் பங்கு மகத்தானது; அளப்பறியது! அப்படிப்பட்ட தேசபக்தர்களுக்கு விடுதலை இந்தியாவில் விருப்பம் போல் இருக்க விடவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு.

கம்யூனிஸ்ட்கள் மீது வழக்குமேல் வழக்கு; அந்த சதிவழக்கு... இந்த சதிவழக்கு... என்று வெள்ளையன் பாணியிலேயே பவனி வந்தது பாரத குடியரசாம் பாழாய்போன காங்கிரஸ்  பே(ய்)ரரசு! இதன் விளைவு நாடு முழுவது முள்ள சிறைச்சாலைகளில் அடைத்து அகம் மகிழ்ந்தது அன்றைய காங்கிரஸ் காட்டுமிராண்டிஅரசு.

ஏன்? எதற்காக? ‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர், உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!’’ என்று பாரதி தாசன் சொன்னாரே... அந்த சமத்துவ கொள்கையை விடுதலை சமவெளிகளில் விதைத்தார்கள்; விடுதலை இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செங்கொடியை உயர்த்திப் பிடித்தார்கள். அதற்காகத்தான் அன்று கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப் பட்டார்கள்!

அப்படித்தான் சேலம் மத்திய சிறையில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த (அன்றைய மதராஸ் ராஜ்ஜியம்) 350 க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தன்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இவர்களில் பெரும்பகுதி 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இவர்கள்யாவரும் அரசியல் கைதிகள்.

இவர்களை கொள்ளை, கொலை, திருட்டு போன்ற  சமூக விரோத, சட்ட விரோத காரியங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘கிரிமினல்’ கைதிகளோடு ‘சி’ பிரிவிலேயே சிறையில் நடத்தப்பட்டனர். விடுதலை போரின் வீரர்களுக்கு அன்றைய காங்கிரஸ்சும், ஆளும் வர்க்கமும் அளித்த பரிசை பார்த்தீர்களா?

இன்று - பாரத சுதந்திரத்தை பாய்போல் சுருட்டி பவ்வியமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு பட்டா போட்டு கொடுக்க நித்தம் நித்தம் சிந்தித்து, நெற்றி வேர்வையை நிலத்தில் சிந்திக் கொண்டிருகிறது மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய காங்கிரஸ் அவியல்(கூட்டு) அரசு! இன்று இந்திய மக்களின் சொத்துக்களைச் சூரையாடிய, சுதந்திரத்தையே அன்னிய சக்திகளுக்கு காவு கொடுக்கிற  மந்திரிமார்களுக்கு குளுகுளு அறையிலே கும்மாளமிடும் ‘வசதி’ உள்ள சிறையில் ‘அடைக்கப்பட்டு’ தனது வர்க்க பாசத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது படுகேவலமாக!

ஆனால் அன்று - "நாங்கள் சுதந்திர போராளிகள்; எங்களை பிக்பாக்கெட் கைதிகள்போல் நடத்தக்கூடாது; அதை உயிர் போனாலும் ஏற்கமாட்டோம்!" என்று வீரசமர் புரிந்தார்கள் சிறையில் நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள். இதுதான் சேலம் சிறையிலும் நடந்தது. கம்யூனிஸ்ட்களுக்கு ‘அரசியல் கைதி’ என்கிற உரிமையைக்கூட வழங்க மறுத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. ‘எங்களை அரசியல் கைதிகளாக’ நடத்த வேண்டும்’ என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்களை காக்கை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு தனது வர்க்க பாசத்தைக் காட்டிக்கொண்டது. ஆம்!  ஆட்சி மாறினாலும் காட்சி மாறா காங்கிரஸ் அரசு தானே அன்றுமுதல் இன்றுவரை இருக்கிறது.

சேலம் சிறையில் நரவேட்டை நடந்தபொழுது சிறையில் இருந்த தோழர் உத்தமலிங்கம் கூறுகிறார்- "... கிரிமினல் கைதிகளைபோல் தொப்பியும், நம்பர் அட்டையும் அணிய வற்புறுத்தினர். ஒவ்வொரு நாளும் வற்புத்துதல் அதிகமானது. 1950 பிப்ரவரி 7 ஆம் நாள் 15 தோழர்களை ‘அனெக்ஸ்’ பகுதியி லிருந்து தலைமை சிறைக்கு கொண்டு சென்றனர். மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விபட்ட எங்களுக்கு ரத்தம்  கொதித்தது. பிப்ரவரி 11இல் நெம்பர் அட்டை அணிய மறுத்ததால் ஜெய்லர் கிருஷ்ணன் நாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினர். சேகரித்து வைத்திருந்த கற்களில் நாங்களும் தாக்கினோம். ஜெயிலர் மீது ஒருகல் விழுந்து விட்டது. அவ்வளவு தான். உடனே துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். அப்பொழுது முன்னனி தோழர்கள் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் தங்களின் நெஞ்சை நிமிர்த்தி காட்டினர். என் போன்று இளைஞர்கள்தான் நிறைய தோழர்கள் இருந்தோம்..! "

17 தோழர்கள் துப்பாக்கி சூட்டிலும், 5 தோழர்கள் அடித்தும் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 11 இல் 22 சுதந்திர போராளிகள் (கம்யூனிஸ்ட்கள்) சேலம் சிறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வீரமரணம் அடைந்தனர். 105 ரவுண்ட் சுட்டுள்ளனர். காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு கம்யூனிஸ்ட்களின் செங்குருதியை குடித்து தன் வர்க்க பாசத்தை உலகுக்கு பறைச்சாற்றிக்கொண்டது. அந்த வீரதியாகிகள் திருபெயர்கள்  இதோ-

ஆறுமுகம், காவேரி, சேக்தாவூத் ஆகியோர் தமிழகம்; எம்.கே. கோபாலன் நாயர், பி. கோபாலன் நாயர், நீலஞ்சேரி நாராயணன் நாயர், பரம்பிக்கடாரம் குஞ்சிப்பா, குஞ்சிராமன், நந்தாரி குஞ்சம்பு, கலாத்தொக்கோயில் ஏதேன், மரோலிகோரன், எம்.நாராயண நம்பியார், புல்லாக்ஜி ஏதேன் கோவிந்தன் நம்பியார், குஞ்சப்ப நம்பியார், வடகோறையின் மான்ஆசாரி, என்.கண்ணன், காட்டூர் நடுவலப்பிறையில் கோரன், உடையாமாடத்து பலக்கல் நம்பியார், தாளன் ராமன் நம்பியார், எம்.கோபாலக்குட்டிநாயர், நடுக்காண்டி பத்மநாபன், நலப்பறக்கல் பாலன் ஆகியோர் கேரளம் ஆவர். இவர்கள் யாவரும் உழைப்பாளி மக்களே!

"சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்" என்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அன்று பஞ்சாப் சகோதர்களை சுட்டு குவித்தானே வெள்ளை பரங்கி ஜெனரல் டயர்... அதுபோல் அன்று சேலம் சிறையில் அரங்கேறியதை கேட்டால் நெஞ்சம் வெடிக் காதவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா? ஆம்..! அன்று ‘விடுதலை’யில் தந்தை பெரியார்- " நினைக்க நினைக்க நெஞ்சம் வெடிக்கிறது" என்றும், ‘திராவிட நாடு’இல் அறிஞர் அண்ணா " கேட்டது வாழ்வு; கிடைத்தது  சாவு"என்றும் தலையங்கம் எழுதி பொங்கி எழுந்தனர். ஆனால், ஆளும் வர்க்கத்தின் சேவகனாக இருந்த ‘தினத்தந்தி’ மட்டும் "22 செம்பிடாரிகள் சாவு" என்று எழுதி ஆளும் வர்க்கத்திற்கு பாதபூஜை செய்தது.

சேலம் சிறைத்தியாகிகள் அன்று சிந்திய  செங்குருதி வீண்போகவில்லை; அவர்களின் சாம்பல்களில் இருந்து இன்று ஆயிரமாயிரமாய் பீனிக்ஸ் பறவைகள்போல் கம்யூனிஸ்ட்கள் எழுந்து வருகிறார்கள். ஆம்! சேலம் சிறைதியாகிகள் எந்த லட்சியத் திற்காக... அதாவது ‘ஒப்பப்பர்’ சமுதாயத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈய்ந்தார்களோ... அந்த சோசலிச சமுதாயம் அமைத்திடும் பணி இன்றும் தொடர்கிறது.

ஒருபக்கம் பெற்ற சுதந்திரம் பன்னாட்டு கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் பறிபோகும் நிலையில் உள்ளது. இன்னொரு பக்கம் 1990 களில் துவக்கப்பட்ட உலக மயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கையால், இன்று நம்நாடு வெளிநாட்டு ,உள்நாட்டு சீமான், சீமாட்டி களின் வேட்டைக்காடாக மாறி வருகிறது.; மேலும் எல்பிஜி கொள்கைகள் அமலாக்கம் விஸ்பரூபம் எடுத்து நம்மை விளிம்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. ஆம்! அணுசக்தி முதல் அடுப்பெரிக்கும் தீக்குச்சி வரை அன்னியர்கள் கையில் அடைக்கலம் ஆகிவருகிறது; அதைத்தான் மன்மோகன்சிங் வகையறாக்கள் சுதி மாறாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய எல்பிஜி கொள்கைகளுக்கு எதிரான போரும், இந்திய சுதந்திரத்தை பேணி பாதுகாக்கும் போரும் வேறுவேறு அல்ல! பாரதத்தைக்காக்கும் குருசேத்திரப் போரைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மண்ணில், சேலம் சிறைத்தியாகிகள் திசைவழியில் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறது.

இதனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லவே..! ஆம்! சோசலிச சமுதாயத்தை படைக்கவே... ஏகாதிபத்திய சக்திகளுக்கு சாவு மணியடிக்கவே... எதிர்வரும் பிப்ரவரி 22 முதல் 25 வரை வெண்மணி தியாகிகள் தியாக பூமியாம் நாகையில் மாநில 20 தாவது மாநாடு களம் காணுகிறது மார்க்சிஸ்ட் கட்சி.  சேலம் சிறைத்தியாகிகள் நினைவு மாதமான இம்மாதத்தில் இம்மாநாடு கூடுவதும், இம்மாநாட்டிற்கு சேலம் சிறைத்தியாகிகள் நினைவாக ‘தியாகஜோதி’ ஏந்தி செல்வதும் சாலப்பொருத்தமே!

தியாகிகளே! நீங்கள் வீழ்ந்த மரங்கள் அல்ல; நீங்கள் வீரிய விருச்சம்! உங்களில் இருந்து நாங்கள் ஆயிரமாயிரமாய்  எழுவோம்! சுரண்டும் அமைப்பை சுக்குநூறாக்குவோம்! சேலம் சிறைதியாகிகளே உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்! இன்குலாப் ஜிந்தாபாத்!
                                                                                                                     -பி.தங்கவேலு
(ஆதாரம்: சேலம் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எழுச்சிமிகு வரலாறு)

இந்த கட்டுரை 11.2.12 அன்று தீக்கதிரில் பிரசுரமானது; நன்றி! 



No comments:

Post a Comment