அழிவின் விளிம்பில் மரவள்ளியும், ஜவ்வரிசி தொழிலும்!
••தமிழகத்தில் மரவள்ளி விவசாயம் சுமார் 20 மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் ஒரு சிறு பணப்பயிராக இருந்து வருகிறது. இதில் கொல்லிமலை, கல்வராயன்மலை, பச்சமலை, பர்கூர்மலை, கடம்பூர்மலை போன்ற மலைவாழ் மக்களுக்கும் பயன் தரும் வகையில் மரவள்ளி பயிர் இருந்து வருகிறது.
••இந்த சூழ்நிலையில் மரவள்ளியில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி உற்பத்தியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், கீழ்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பொழுது தரமான ஜவ்வரிசி உற்பத்தியாகி நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்களுக்கும் அது பயன்பெறும் வகையில் அமையும்!
••ஜவ்வரிசி தயாரிக்கும் பொழுது மரவள்ளி கிழங்கு நன்றாக தோல் உரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
••ஜவ்வரிசி விலை உயரும் பொழுது சில உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து விலை குறைவான மக்காச்சோள மாவை மரவள்ளி கிழங்கு மாவில் கலப்படம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இப்பிரச்சனை தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்வது FSSAI விதிகளுக்கு முரணாகும். இவ்வாறு மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதால் ஜவ்வரிசியின் விலை குறைந்து இதனால் மரவள்ளி விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்காமல் போய்விடுகிறது.
••இந்த மக்காச்சோளம் மாவு கலப்படப் பிரச்சனை ஆந்திராவில் ஆரம்பித்து தற்போது தமிழகத்திலும் தலைதூக்கி உள்ளது.ஆகவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்படி கலப்படத்தைக் கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்திட வேண்டும்.
••கடந்த பல வருடங்களாக ஜவ்வரிசி தயாரிக்கும் பொழுது ரசாயனம் கலப்பதாக புகார் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 2016 ஜூன் மாதத்தில் தில்லி FSSAI சுமார் 10,000 FOOD ADDUTIVES ஐ உணவு தயாரிப்பில் அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.
••ஆகவே ஜவ்வரிசி தயாரிப்பில் எந்த வகையான FOOD ADDUTIVES -ஐ உபயோகப்படுத்தலாம் என்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தி ஜவ்வரிசி, ஸ்டார்ச் தொழிலை மேம்படுத்தி நுகர்வோர்கள் பயன்பெறவும், இதன்மூலம் மரவள்ளி விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகை செய்ய வேண்டும்!
••தமிழக உணவுப் பாதுகாப்பு துறையில் ஜவ்வரிசியில் எந்த வகையான FOOD ADDUTIVES ஐ அறிவியல் ரீதியாக உபயோகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுதுதான் இந்த துறையில் தற்பொழுது நடைபெற்று வரும் ஊழல் குறைந்து நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதோடு நுகர்வோருக்கும் தரமான ஜவ்வரிசி கிடைக்கும்.
••அதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும்! அல்லது மரவள்ளி கிழங்கை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!
••இவ்வகையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையரும், தமிழ்நாடு முதல் அமைச்சரும் உடனடியாக தலையிட்டால் தான் அழிவின் விளிம்பில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தையும், ஜவ்வரிசி தொழிலையும் ஓரளவாவது பாதுகாக்க முடியும்!
- பி.தங்கவேலு.
(நன்றி: தீக்கதிர் நாளிதழ் 21.07.2016).




