Tuesday, 12 July 2016

தமிழ் நாடன்
   ------***------
தமுஎகச சேலம் மாவட்ட கௌரவ தலைவர் இலா.வின்சென்ட் எழுதி நூலாக வந்துள்ளது “தமிழ்நாடன்”. இது ஓர் அரிய நூல் என்றுதான் சொல்ல வேண்டும். 

சாதாரண ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில், மிகவும் பின் தங்கிய கிராமத்தில் பிறந்து உலகையே தனது உள்ளங்கையில் வைத்து, வினையாற்றுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவே இக்காலத்தில்! அதுவும்- இலக்கியம், பண்பாடு, கலை, கலாச்சாரம் என பன்முக தளத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்… அதிலும், தன் சுயமுயற்சியில், தன்னை உயரிய விருதாம் சாகித்திய விருது பெறும் அளவுக்கு உயர்ந்தவர்கள் மிகமிக சிலரே..! அந்த வரிசையில் தமிழ்நாடன்! அதிலும் அவர்- சேலம் போன்ற வறண்ட பிரதேசங்களில் இப்படியொரு எழுத்தாளுமை உருவாகி வருதல் அரிதிலும் அரிதே! 

1943இல் பிறந்து 2013இல் மறைந்த காலம் என்பது- இலக்கிய உலகில் வானம்பாடி கவிஞர்கள் சிறகடித்து பறந்த காலம். அவர்களோடு ஒட்டியும், வெட்டியும் வாழ்ந்த தமிழ்நாடனின் வாழ்க்கையை இந்த நூல் மிக நேர்த்தியாக வடிவமைத்து,  ஒரு வரலாற்று பெட்டகமாகவே பரிமாறி இருக்கிறார் எழுத்தாளர் இலாவி என்றழைக்கப்படும் இலா.வின்சென்ட்.

கவிதை, கட்டுரை, கவிதையிலான கட்டுரை, ஆய்வு கட்டுரைகள், நாவல், உரைநடை, நாடகம், நூல்கள் தொகுப்பு, மொழிபெயர்ப்பு, தொல்லியல் ஆய்வு, ஓவியம் என இவர் கால்பதித்த தடங்கள் வாசிப்போரை பிரமிக்க வைக்கும் என்பது திண்ணம். அவற்றில் ஒரிரு மட்டுமே சுவைக்க இதோ—

"நாங்கள் வானம்பாடிகள்
மானுட கானம்பாடிகள்- உழைப்பு
ஞானம் பாடிகள்” (பக் 27)

‘வேம்பு’ தலைப்பு… அவரின்  கவிதையில் தாழ்த்தப்பட்ட மக்களின்  உரிமைக்குக் குரல் இதோ---
“ராஜாவே
விழி!
அக்கிக்குண்டம் ஆகட்டும் உன்
விழி!” (பக் 27)

“வருண பேதத்தைப் புதைத்துவிடு
வர்க்கப் போதனைக்கு உயிர் ஊட்டு
நீ கூவு ராஜாவே
‘அரிஜன் அல்ல நான்
மனுசன்' " (பக் 27-28)

இதோ… வெண்மணி தீ கண்டு வெகுண்டெழுவதைப் பார்…
“ராஜாவே
எழு
ஆணையிடு
தோழர்கள் கூடட்டும்   
தோக்குகள் பாடட்டும்”  (பக்-28)

சேலம் நாடாளுமன்ற உறுப்பினரை உறுத்தியதால், நாற்பது மைல்களுக்கு அப்பால் விரட்டி அடிக்கப்பட்ட … ஆம், இவருக்கு பணி மாறுதல் பரிசு தந்த கவிதை இதோ…

“காலம் வந்தால்
சட்டை கழற்றும் பாம்பு
காசு வந்தால்
சட்டை மாற்றுவார் எங்கள் எம்பி”  (பக்- 33)

நாட்டுப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு…
"பகத்சிங் உயிர் உறிஞ்சிய
தூக்குக் கயிற்றைத் தேடிக்கொடு
வீரக் குருதியில் நனைந்த
அதனை முத்தமிடுகிறேன்” ( பக்-53)

ரஷ்யபுரட்சியை ருசிக்கிறார் பாருங்கள்…
“உனது பதாகை
புதுமனிதனின் புதுரத்தம்
இலச்சினை
என் வர்க்கத்தின் வலிய காவல்”

இந்த நூலை படித்து முடித்ததும் என்னை என் மனம் குற்ற உணர்வால், வாட்டி வதைத்தது; காரணம் அவரின் பிறந்த மண்ணும், நான் பிறந்த மண்ணும் ஒன்றே!  ஆம், இத்தகைய ஆளுமையோடு நட்பு வட்டாரத்தில் இல்லாமல் இருந்தாலும்,  அவரின் இறுதி யாத்திரை நிகழ்வில்கூட கலந்துக்கொள்ளாமல் போய் விட்டோமேயென்றுதான்! 

ஆம், ஒன்றுபட்ட சேலம் மாவட்டம் தான் அவரின், எனதின் பிறந்த மண்! இப்படி ஒரு உலகம் போற்றும் ஆளுமையுடன் பரிச்சியம் இல்லாமல் போனது எமது வாழ்வில் ஒரு துர்பாக்கியமே என்றால் மிகையன்று.

உலக மொழிகளில் இருந்து சுமார் 700 கவிதைகளை தமிழுக்குக் காணிக்கையாக்கி உள்ளார்; இது இமாலய சாதனை அல்லவா? படைப்பாளிகளுக்கு தான் சுயமாக ஒன்றை படைப்பதைக் காட்டிலும், வேறு மொழியில் இருந்து தாய்மொழிக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல! அது ஒரு தவம்! 

அதுபோல் இது போன்ற ஆளுமைகளின் சுயசரிதையை சுருக்கமாக வடித்தெடுப்பதும் அத்தனை எளிதல்ல; அதை மிக அருமையாக செய்து முடித்திருக்கிறார் எழுத்தாளர் இலாவி.

கரடுமுரடான ஒரு விசயத்தைக்கூட, கலகலப்பாக சொல்லும் கலை எல்லோருக்கும் வசப்பட்டுவிடுவதில்லை. ஆம், நேரில் பேசும்போதும், அவரின் படைப்புகளை வாசிக்கும் போதும், கிடைக்கும் சுகம் இருக்கிறதே… அது மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்பார்களே… அதுதான் இலாவி. அவரின் நடை அருவிபோல், சலசலவென தெளிந்த நீராக ஓடுவது இந்த நூல் வாசிப்புக்கு மிக உந்துவிசையாக இருக்கிறது என்றால் மிகையல்ல! 

இந்நூல் சாகித்திய அகாதமி வெளியிட்டு இருப்பது மிகுந்த சிறப்பே! இது இன்றைய இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டிய நூல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை; என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் வரிசையில் “தமிழ்நாடன்”

நூலாசிரியர் கூறுகிறார்— "தமிழ்நாடன் நம்மிடையே பலவித கருத்துக்களை விதைத்துள்ளார். அவற்றில் ஒன்று “பொய்மைக்கு ஏவல் செய்து வாழ்வதைவிட உண்மையிடத்துப் போரிட்டுச் சாகலாம்” என்பது. இதைப் படைப்பாளர் உணர்வுகளிலும், மக்கள் மனங்களிலும் பதிய வைப்பதே நமது கடமையென்று கருதுகிறேன்”.  

ஆம், நூலாசிரியர் கூறுவதைப்போல் அனைவரது மனங்களிலும் பதிய வேண்டிய நூல் இது என்றால் மிகையன்று! இந்திய இலக்கிய சிற்பிகளை பெற்றெடுத்த மண் சேலமும் ஒன்றென்பதில் இயற்கையாகவே மனம் பூரிப்படைகிறது; ஆம், அது எமக்கு மட்டுமல்ல; வாசிக்கும் அனைவருக்குமே!
                                                                                                                                 -பி.தங்கவேலு.
#
(நூல் வெளியீட்டு விழா சேலம் தமிழ்ச்சங்கத்தில் 8.7.16 மாலைப் பொழுதில் நடைபெற்றது. ஏராளமான எழுத்தாளர்கள் பங்கேற்ற விழா இனிதே நடந்தேறியது! நூல் விலை ரூ 50/; விற்பனை அலுவலகம்: சாகித்திய அகாதெமி 'இரவீந்திர பவன்', 35, பெரோஸ்ஷா சாலை, புதுதில்லி-01)
#
தொடர்புக்கு: எழுத்தாளர் இலாவி., கைபேசி: 94437 31435.

No comments:

Post a Comment