Friday, 28 October 2016

‘’ஆலை வாங்கினால் சோலை இலவசமா!?’’
‘’பாரதிய ஜனதா கட்சிக்குள்ளோ, அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளோ அவர்கள் அனைவரையும் விட உயர்ந்த இடத்தில் உள்ள அவர்களது தலைவரின் கருத்துக்கு மட்டுமே அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அது மட்டுமே அங்கு செல்லுபடியாகும். அங்கு பல்வேறுபட்ட கருத்துகள் என்பதற்கு இடமேயில்லை. மனித முகத் தோற்றத்துடன் கூடிய தாராளமயக் கொள்கைகளுக்கு பதில், இன்றைக்கு மக்கள் மத்தியில் அவர்கள் அமலாக்கிக் கொண்டிருப்பது மனித முகத் தோற்றத்தைப் புறக்கணிக்கக் கூடிய, ஈவு இரக்கமற்ற, கடின நவீன தாராளமயக் கொள்கைகளாகும்’’ என்கிறார் வாழும் மார்க்சீய பொருளாதார நிபுனர் பேராசியர் பிரபாத் பட்நாயக். இது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், இன்றைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் உள்ள மிக முக்கிய வேறுப்பாட்டை மிகத் துல்லியமாக அளவிட்டு உள்ளதையே காட்டுகிறது என்றால் மிகையல்ல.


அதாவது வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பர். அதுதான் இன்றைய பாஜக ஆட்சி. பெயரளவுக்கு ஒரு கூட்டணி ஆட்சி. அது மக்களின் மனங்களில் மண் தூவுவதற்கு! ஆம், காங்கிரஸ் ஆட்சியை விட ஆயிரம் மடங்கு அடக்குமுறை ஆட்சியாக பாஜக ஆட்சி மாறியிருக்கிறது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகிறார்… ‘பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து சொல்வதோடு நீங்கள் (முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்) நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று மிரட்டுகிறார். ‘தலாக்என்ற ஒரு வார்த்தையை இந்திய மொழிகளில் இருந்து எடுத்து விடுவதற்காகவே வரிந்துக் கட்டிக் கொண்டு செயலாற்றுகிறார்கள். 16 வலைதளத்தில் கேள்விகளை முன்வைத்து மக்களிடத்தில் தற்போது கருத்து கேட்க துவங்கி இருக்கிறார்களாம்; 128 கோடி மக்கள் வாழும் நாட்டில் எத்தனை லட்சம் மக்களிடம் கருத்து கேட்க போகிறார்கள்? தெரியவில்லை.

இந்தியாவில் பாஜக கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும், பொதுசிவில் சட்டம் வந்துவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடமுடியுமா? ஒன்றும் கிடைக்காது. அது நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டேதான் இருக்கும். காரணம் அவர்கள் கையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கை.

ஆம், காங்கிரஸ் ஆட்சியில் உரலுக்கு ஒரு பக்கம் இடி. ஆனால் பாஜக ஆட்சியில் மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி அல்லது இடி. ‘பொதுசிவில் சட்டம், ராமர் கோயில், காஷ்மீருக்கு இருக்கும் விஷேச அதிகாரம் ரத்துஇதுவே இவர்களின் தாரக மந்திரமும் பிரதான அஜண்டாவும். இவற்றோடு ஈவு இரக்கமற்ற கடின நவீன தாராளமயம் அமலாக்கமும் சேர்ந்துக் கொண்டுவிட்டது. ஆம், மக்களை பொருளாதார ரீதியில் சுரண்டிக் கொடுமைப் படுத்துவதோடு- கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில், இரட்டைக் குழல் துப்பாக்கியால் துல்லிய ஸ்டிரைக்செய்வதைத்தான் தற்போது நடந்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. விரைவில் வர இருக்கிற உபி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மீண்டும் ராமருக்கு கோவில்கட்டுவது பிரச்சனையையும் கையில் எடுக்கவும், அதற்கேற்ப தக்க சமயத்தில் துல்லிய தாக்குதலைமிக துல்லியமாக திட்டமிட்டு, மக்கள் மீது  தொடுத்திட துள்ளிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

ஒரு பக்கம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாட்டு கலாசாரத்தின் மீது தாக்குதல்; மறுபக்கம் பொருளாதார ரீதியாக தாக்குதல். ஆம், ஏற்கனவே இவர்கள் ஆண்டபோது, பொதுத்துறைகளை விற்பதெற்கென்றே தனி அமைச்சர், அமைச்சகம் அமைத்தவர்கள் என்பது இங்கே நினைவு கூற தக்கது. அதன் தொடர் வேகம் தற்போது ரொக்கைக் கட்டிபறந்து ஆரம்பித்து விட்டது. பாதுகாப்பு துறையில் துவங்கி, ரயில்வே துறை வரை பொதுத்துறை ஆலைகளை தனிமனிதனுக்கு விற்கும் தந்திர நடவடிக்கைகளை எடுத்துவிட்டது மத்திய அரசு. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் சேலம் இரும்பாலையை ஸ்சுவாகாசெய்திட கால்கோள் நிகழ்வுநடத்திவிட்டது மத்திய அரசு.

சேலத்தில் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் 1981இல் இரும்பாலை துவங்கப்பட்டது. இதற்கு ஒரு காரணமாக இருந்தது- அன்று சொன்னது- இந்த ஆலை இருக்கும் அருகில் இருக்கும் கஞ்சமலை. இந்த கஞ்சமலையில் இரும்பு தாது இருப்பதாகவும், அதை வெட்டி எடுத்து, இரும்பு தயாரிக்கப்படும் என்பதாகவும் கூறப்பட்டது. அதன்மூலம் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு ஆலைகள் அமைக்கப்படும் போதும் அப்பகுதி மக்களுக்கு இப்படித்தான் ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்படுகிறது. அதோடு 4000 ஏக்கர் எடுக்கப்பட்டபோது ஒவ்வொரு நிலப்பட்டாதாரிக்கும் ஆலையில், ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் நடந்ததா? அது தனிக்கதை.

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. ‘நரி செத்தாலும், அதன் கண்கள் ஆட்டு மீதுதான் இருக்கும்என்று. இன்றைக்கு நட்டத்தில் இயங்கும் ஆலைகளை விற்கிறோமென கூறி, பொதுமக்கள் கண்களில் மண் தூவுகிறார்களே அது ஏன்? நட்டத்தில் இயங்கும் ஆலையை அரசுதானே எடுத்து நடத்திட வேண்டும்; அதற்குதானே அரசு. அப்படி செய்தால் அதை புரிந்துக் கொள்ளலாம். ஆனால் அதை தனியாருக்கு விற்றால், அதையும் தனியார் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் என்ன முட்டாள்களா? அல்லது தர்மபிரபுகளா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இதற்கு இந்த இரும்பாலை கதையே போதும்.

ரூ181 கோடியில் அன்று துவங்கப்பட்டது. அது படிப்படியாக தொழிலாளர் உழைப்பு, நிர்வாக திறன் (இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும்) ஆகியவற்றால் 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ2000 கோடி முதலீட்டில் உலக தரம் வாய்ந்த உருக்காலையாக உருவாகி உள்ளது. நம் சட்டைப்பையில் இருக்கும் சில்லரை காசுகளில் இருந்து, சந்திர மண்டலத்தில் உலாவும் சந்திரான் விண்கோள் வரை தரமிக்க உலக புகழ் பெற்ற உருக்கை உருவாக்கி தந்துள்ளது. 900 குடியிருப்புகள், பொதுமருத்துவமனை, பொது நூலகம், பொது கல்விசாலை என சகல வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாலையில் தற்போது 1200 நிரந்தர உழைப்பாளிகள் மற்றும் கூட்டுறவு முறையிலும், ஒப்பந்த முறையிலும் 850 உழைப்பாளர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

3,000 கோடி என்பது ஆலை மதிப்பு; ஆலை இருப்பது 2500 ஏக்கர்; ஆலை இல்லாமல் இருக்கும் 1,500 ஏக்கர்; குளுகுளு ஏற்காட்டில் 10 ஏக்கர் மொத்தம் 3010 ஏக்கர் இருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ15,000 கோடி. ஆலையின்றி காலியாக இருக்கும் நிலத்தில் தேக்கு, சந்தனம் என பணப்பயிர் மனம் வீசிக் கொண்டிருக்கிறது. ‘லாபம் இல்லாதவன் ஆத்தோடு போக மாட்டான்என்பார்கள். ஆம், இரும்பைவிட உறுதியாக தேக்கு; இரும்பைவிட புகழ்மிக்க மனமனக்கும் சந்தனம்; இதெல்லாம் எங்கே கிடைக்கும்? ஆம், ‘ஆலை வாங்கினால் சோலை இலவசமாக எங்கே கிடைக்கும்? இந்தியாவைத் தவிர! ஆக மொத்ததில் கோடிக்கணக்கில் ஒரே இடத்தில் பொன்னும் பொருளும் புதைந்து கிடக்கும் இந்த புதையல்லைக் கொள்ளை அடிப்பதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

இதிலே சூழ்ச்சி என்னவென்றால், நட்டத்தில் இயங்குகிறது என சொல்வதன் சூது என்னவென்றால், அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கே ஒழிய வேறொன்றுமில்லை. இங்குள்ள சொத்து மதிப்பு ரூ15,000 கோடியை கணக்கில் காட்டாமல், ஓரிரு ஆயிரம் கோடியை மட்டும் கணக்கு காட்டிவிட்டு, அதன்பின் நூறு, இருநூறு கோடிக்கு அமுக்கிக் கொள்வதற்குதான்  நட்டம் நட்டம்என கூவுவதன் அர்த்தம். இப்பொழுது புரிகிறதா? இவர்களின் சூது!

இது இங்கு மட்டுமல்ல. இந்திய தேசம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பொதுதுறை மற்றும் அரசுதுறை சார்ந்து சோலைகள் பூத்து குலுங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கு இவைகள் யாவும் தங்கச் சுரங்கங்களே!’. அதனால்தான் ஒரு கல்லில் இரண்டு மாங்கனிஅடிக்கிறார்கள் இந்திய அன்னிய முதலாளிகள். ஆலைக்கு ஆலையும் கிடைக்கிறது; சோலைக்கு சோலையும் கிடைக்கிறதல்லவா? விடுவார்களா? இதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு புள்ளி வைத்தது; இன்றைய பாஜக அரசு அதை துல்லியமாக சூறையாட அல்லது ஸ்வாகா செய்திட துடிக்கிறது.

இந்திய நாட்டின் பொதுத்துறை எல்லாம் வெறும் லாப நட்டம் பார்க்கும் குமாஸ்தா தொழிலா? அல்ல! இந்தியாவின் ஆன்மா! இந்தியாவின் இதயம்! இந்திய தேசம் இந்தளவுக்கு இன்று உயர்ந்து, உலக அளவில் நெஞ்சை நிமிர்த்தி நேர்நடை போடுகிறதென்றால், எதிரிகளை துல்லியமாக சுட்டு வீழ்த்துகிறதென்றால், அல்லது துல்லிய ஸ்டிரைக்செய்கிறதென்றால், அதற்கு யார் காரணம்? இன்றைக்கும் இருக்கும், அன்றைக்கு இருந்த அரசுகளும், அவர்களின் எஜமானர்களுமா? இல்லை. இல்லவே இல்லை. இந்திய மக்களும், உழைப்பாளி வர்க்கமும்தான். இந்த இரும்பாலை போன்ற பொதுத்துறை நிறுவனங்களும்தான். அவர்களின் அயறாத உழைப்பும்தான்.

ஆம், அன்று வந்த பாஜக அரசில் பொதுத்துறையை விற்கும் பணியை ஒரு அமைச்சரும், ஒரு அமைச்சகமும் தான் செய்தார்; செய்தது. ஆனால் இன்று- இந்திய பிரதம அமைச்சரே, ஆம் பிரதமரே அத்திருப்பணியை செய்து கொண்டு வருகிறார். அவருக்கு இரண்டே இரண்டு பணிதான். ஒன்று- உலகத்தில் உள்ள ஒரு நாட்டையும் விடாமல் சென்று, அங்குள்ள முதலாளிகளை இந்தியாவுக்கு வந்து வேண்டியதை சுருட்டிக்கொண்டு செல்ல அழைப்பது; அதோடு இந்திய முதலாளிகளுக்கு அங்குள்ள சொத்துக்களைச் சுரண்டிட வாய்ப்பு வசதிகளை செய்து தருவது; இரண்டு- பன்முகம் கொண்ட பாரத தேசத்தை ஒருமுகம் கொண்ட இந்துத்துவா தேசமாக மாற்றுவது; இவற்றிக்கு எதிராக குரல் கொடுப்போரின் குரல்வளையை நசுக்குவது.

இந்த இரண்டு அம்சங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மைய களமாக இன்று இருப்பது பொதுத்துறையும் அரசுத்துறையுமே என்றால் அது மிகையல்ல. ஆம், 2015 செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்ததின் போது சண்டமாருதம் செய்தோர் எண்ணிக்கை 10 கோடி. அது 2016 செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தத்தின் போது அதன் எண்ணிக்கை 18 கோடி என பொங்கி எழுந்தனர். போர் பரணி பாடினர். இதெல்லாம் இந்த மத்திய அரசின் ஈவு இரக்கமற்ற கடின பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்த வீரபோர் அல்லவா? இதற்கு அச்சாக இருப்பதும் இருந்து வருவதும் வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, உள்ளிட்ட இதுபோன்ற பொதுதுறை அல்லவா? இதை பொறுத்துக் கொள்ளுமா ஆளும் வர்க்கம்!?

ஆகவேதான் இது உருக்காலையையோ, பொதுத்துறையையோ காக்கும் போராட்டம் அல்ல. ஒட்டு மொத்த நம் தேசத்தையும், தேச செல்வங்களையும் காக்கும் போராட்டம். நாம் போற்றி பேணி காத்து வரும் பன்முக தன்மை கொண்ட வாழ்வியலைக் காக்கும் போராட்டம். ஒற்றை கலாசாரத்திற்கு எதிராகவும், ஒட்டச்சுரண்டலுக்கு எதிராக வும்ஒற்றை மனிதனாகஎழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. ஈவு இறக்கமற்ற கடின நவீன தாராளமயச் சுரண்டலை எதிர்த்த தேசம் காக்கும் போரில் அணிதிரள்வோம். மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தும் குருசேத்திரப் போரை திக்கெட்டும் கொண்டு செல்வோம். நம்முடைய உழைப்பில் விளைந்த செல்வங்களை, தேசத்தைக் கண் இமையாய் காப்போம்.
                                                                                      -பி.தங்கவேலு.

இது எடிட் செய்யப்பட்டு 19.01.016 தீக்கதிலில் பிரசுரமாகி  உள்ளது. தீக்கதிருக்கு நன்றி!

No comments:

Post a Comment