Monday, 31 October 2016

ஆடு நனையுதே என்று ஒநாய் அழுகிறதா?
மனுநீதியை பொதுசிவில் சட்டம் கட்டுபடுத்துமா?


கடந்த ஒரிரு நாட்களாக நம் நாட்டின் பிரதமரின் உரை கவலை மிக்கதாகவும், ஆர்ப்பரிப்பு மிக்கதாகவும் செய்தித் தாள்களை அலங்கரித்த வண்ணம் இருக்கின்றன. இதைப் படித்த எவரொருவரும் உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று முடிவுக்கு வந்துவிட்டால ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தளவுக்கு வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்ல தோன்றும். ஆம், இதுதான் இவரின் சொந்த முகமா? அல்லது முகமூடி முகமா? மோடி முகம்என்று பார்ப்போமா?

அதாவது தலாக்முறையால் முஸ்லீம் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்களாம்; அதை அனுமதிக்க முடியாதாம்; அதோடு பெண்சிசு கொலையையும் அனுமதிக்க முடியாதாம்! அடுத்து பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறையையும் இந்த அரசு பார்த்துக் கொண்டு இருக்க முடியாதாம். இது இவரின் பேச்சின் சாரம். இது எப்படி இருக்கிறதென்றால், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதக் கதைபோல் இருக்கிறது அல்லவா?
நமது பிரதமர் பிதற்றுகிறார்

தலாக் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் பெண் சிசுக் கொலையைப் போலவே பெண்களுக்கு எதிரான செயல்பாடுதான். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம்என்கிறார். இது காவிரிக்கும், பாகிஸ்தானுக்கும் பொருந்தாது போலும்.
மேலும் தொடர்கிறார்… ‘தலாக் விவகாரத்திலும், மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு சிலரோ அது குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைக்கு வராமல் மக்களை தூண்டி விடும் நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றனர்என எச்சரிக்கும் வகையில் கூறுகிறார். மேலும் கூறுகிறார்… ‘முஸ்லீம் பெண்களின் உரிமைகள் பாதுகாகப்பட வேண்டுமா? அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமா? என்பதற்கு நீங்கள்தான் (மக்கள்) பதில் கூற வேண்டும்’. அப்படி என்றால் உபி மக்கள் பாஜக வுக்கு ஒட்டு போட வேண்டும் அல்லவா பிரதமரே?

அடுத்து தொடருகிறார்… ‘தலாக் விவகாரத்தை சில கட்சிகள் அரசியல் ஆக்குக்கின்றனஎன உபி தேர்தல் பிரச்சார தயாரிப்பு கூட்டத்தில் நீட்டி முழங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் முசாபர் நகரில் மூண்ட கலவரம் போல் மீண்டும் மூள முடிச்சு போடுகிறார்; நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்களைப் பார்த்து கேட்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? சீண்டி விடுகிறார் என்றுதானே அர்த்தம்.

இதற்கு மேலும் சொல்கிறார் பாருங்கள்… ‘அற்ப ஆதாயத்திக்காகவும், வாக்குக்காகவும் அக்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. ஊடகங்களும் இந்த விவகாரத்தை மதரீதியாக அணுகுகின்றன’. என்னேதேசப்பற்று பாருங்கள். இன்னும் அவர் உதிர்த்த முத்துக்களை கேளுங்கள்… ‘ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையாகவோ, பாஜக-முஸ்லீம் அமைப்புகளின் பிரச்சனையாகவோ இதை கொண்டு செல்லக் கூடாது; பெண்ணுரிமையைப் பறிக்கும் தலாக் நடைமுறை இருக்கலாமா? வேண்டாமா? என்ற கோணத்தில் விவாதம் நடத்த வேண்டும். தலாக் என்ற பெயரில் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்க்கையை பாழாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’. அடேய் சாமி..!
இவர் முதல் அமைச்சராக இருந்தபோது 2002இல் நடந்த கலவரத்தில் முஸ்லீம் கற்பினி பெண் வயிற்றை ஒரு பெண்ணைக் கொண்டே சூலாயுதத்தால் கிழித்து, அந்த முஸ்லீம் பெண் வயிற்றில் இருந்த சிசுவையும் எடுத்து நெருப்புக்கு தீணியாக்கியவர்களை, தாய்யையும் சேய்யையும் தீ ஜுவாலைக்கு பலியாக்கியவர்களைத் தண்டிக்காமல், உலா விட்ட உத்தமர்தான் இவ்வாறு பேசுகிறார். அதோடு அந்த கலவரம் முடிந்ததா? 3000க்கும் மேலான முஸ்லீம் ஆண் பெண்களை கொன்று குவித்த ஆட்சியின் முதல்வராக இருந்தவர் அல்லவா இவர்.

ஒருவேளை இவ்வண்ணம் பேச மோடியாருக்கு தகுதி இருக்குமேயானால், அன்று அவர் குறைந்த பட்சம் தனது பதவியை விலக முன் வந்திருந்தால் கூட, ஒரு வாதத்திற்காக இதை பேச்சை ஏற்கலாம். ஆனால் அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்தான்இனி எந்த முகத்தைக் கொண்டு நான் வெளிநாடுகளை நான் பார்ப்பேன்என்றார்.

இதற்கு மேலும் இவர் வடிக்கும் நீலிக் கண்ணீரைப் பாருங்கள்… ‘இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்று பாலின விகிதம் குறைந்துள்ளது. சமநிலையற்ற இந்த சூழலுக்கு காரணம் பெண் சிசு கொலைதான். இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மதத்தின் பார்வையில் இந்த விவகாரத்தை அணுகாமல் கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுத்து வருகிறதுஎன நாகூசாமல் பேசுகிறார்.

அடுத்து ஒருநாள் பேச்சு… ‘வனப்பகுதிகளில் தொன்றுத் தொட்டு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்க கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்அடப்பாவமே..! வன உரிமை சட்டம் 2006ஐ அமலாக்காமல், வனங்களை அன்னிய கம்பெனிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு பேசும் பேச்சை பாருங்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் இவரின் இந்த பேச்சு

இந்த பெண்ணுரிமை போராளியின் குருபீடம்பெண்ணுரிமை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே வேறு வர்ணங்களில் இருந்த 10 கணவர்கள் இருந்து அவள் 11 வதாக பிராமணனை மணந்திருந்தால்கூட,  11 வதாக மணந்த பிராமண்ணுக்கே அவள் உரிமையானவள். மற்றவர்களுக்கு அல்ல.’

நிஷாதனுக்கு விதேகப் பெண்ணிடம் தோல் வேலை செய்கிற கார்வாரன் பிறக்கிறான்

புற்க சாதிப் பெண்ணுடன் சண்டாளன் கூடிப் பெறும் பிள்ளைக்கு சோபகன் என்று பெயர். நீதியின் முன்னிலையில் மரண தண்டனைக்கு உள்ளானவன் உயிரை வாங்கும் கொலைத் தொழில் இவனுடையது

நிகராதப் பெண்ணை சுகித்து சண்டாளன் உற்பத்தி செய்யும் அத்தியாவசாயிக்கு சுடுக்காட்டைக் காத்தல் தொழிலாகிறது

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்த செய்யுமாறு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்’ (திருமணத்தில் பிராமணன் சொல்லும் வேதமந்திரம் இது)

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என 3 றாக பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது

பெண்ணுக்குக் கல்வி கற்கும் உரிமையில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் உரிமையில்லை. பெண்ணுக்கு திருமணம் என்பது 8 வயதுக்குள்ளேயே நடைபெற வேண்டும். அதற்குள் திருமணம் நடைபெற வில்லையென்றால், அவளது தந்தைபாபவிமோசனத்திற்கானசடங்குகளை செய்ய வேண்டும்

பெண்ணேநீ குழந்தை பருவம் முழுவதும் அப்பன் சொல்வதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொல்வதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்தது முதல் உன் மகன் சொல்வதைக் கேள்
பெண்ணேஉனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள்

இப்படியே போகிறது மனுநீதி. மேலும் மனுநீதியின் வழிவந்தவர்கள் சொல்கிறார்கள்

பெண்களை நம்பாதே. அவர்கள் தங்களது பாவனைகளால், ஆழகால் உன்னை மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடம் சிக்கிவிடாதே’ ‘பெண்ணும் ஒரு பொருள்தான். அவளை விற்க-வாங்க எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த ஆணுக்கு உரிமை உண்டு’ –இது ஆதிசங்கர்.

பிராமண ஸ்திரிகளும் சூத்திரர்கள்தான். அவர்களுக்கு மோட்சத்திற்கு போகும் தகுதி கிடையாது. இந்த ஜன்மத்தில் ஆணின் அடிமையாக அவளுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றினால், ஆண்டவன் அனுக்கிரகத்தால் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாக பிறக்கலாம். பின்னர் சொர்க்கத்திற்கு போகலாம்’ –இது ராமானுஜர்.

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள வால்மீகியின் ஜாதி சேர்ந்தவர்களுக்கு (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா?) ஆன்மீக அனுபவம் கிடைக்கலாம். இந்த பணி சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்பட்டதாகும்’ –இது இன்றைய பிரதமர் நரேந்திரதாஸ் மோடி.

இப்படிப்பட்ட வழியில் வந்த மோடிதான் பெண்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் அவர்களின் உரிமைக்கும் சண்டமாருதம் செய்கிறார். என்ன நடிப்பு பார்த்தீர்களா? எல்லாவற்றிக்கும் உச்சபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு தர்பாரில் உள்ள மனு சிலையில் கோல்வார்கர் எழுதி வைத்துள்ளார்… ‘எல்லோரைக் காட்டிலும் மகத்தான உச்சமட்ட ஞானம் நிறைந்த முழுமுதல் மனிதகுல சட்ட நியதிகளை அளித்தவர் மனுஎன்று.

அய்யா நரேந்திரதாஸ் மோடி அவர்களேதாங்கள் கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கும் பொது சிவில் சட்டம் மனித குல சட்ட நியதிகளை அளித்த மனுவைக் கட்டுபடுத்துமா? அல்லது மனு பொதுசிவில் சட்டத்தைக் கட்டுப்படுத்துமா? எது எதை கட்டுப்படுத்தும்? முஸ்லீம் பெண்களுக்காக குடம் குடமாக அல்லது குளம் குளமாக கண்ணீர் வடிக்கும் பாஜக இதற்கு பதில் அளிக்குமா? இந்து பெண்களுக்கு இதுபோன்ற எண்ணற்ற அடிமைத்தனங்களில் இருந்து பொதுசிவில் சட்டம் விடுதலை பெற்றுத்தருமா?

இதைத்தான் இன்றைய குடியரசு தலைவர் மிக நிதானத்துடன் இவ்வாறு பகிர்கிறார் போலும்… ‘இந்தியாவில் 200 மொழிகள், 1800 எழுத்து வடிவமற்ற மொழிகள், 7 மதங்கள் உள்ளன. இந்த வேற்றுமை இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அதனை இந்தியா கொண்டாட வேண்டுமே தவிர, இது போன்ற வேற்றுமைகளை செயற்கையாக ஒன்றுப்படுத்த முயற்சிக்க கூடாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் சாத்தியமில்லை’.

நரேந்திரதாஸ் மோடியின் ஆரம்ப 11 மாத கால ஆட்சியின் லட்சணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடும் இவ்வாறு மதிப்பிடுகிறது. அதை இங்கே கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அதன்பின்னான இன்றைய நாள் வரை அவரின் ஆட்சியின் லட்சணமும் இதுதான்.

பாஜக வின் தேர்தல் வெற்றியும், மோடி அரசாங்கம் தோன்றியதும் ஒரு வலதுசாரி தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. கார்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்கு தீணி போட்டுள்ளன’.

பாஜக அரசாங்கம் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அறிவித்து, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்புகளை உயர்த்தியது. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்பை 49% உயர்த்தியது. ரியல் எஸ்டேட் வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது. இவ்வாறு பாஜக அரசாங்கம் நவீன தாராளமயப் கொள்கைகளை மிகவும் உக்ரமாக தொடர்கிறது. மத்திய பட்ஜெட் 2015-16 ரூ 69,500 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைக்கு வழிவகுத்து உள்ளது’. (சமீபத்தில் சேலம் உருக்காலை உள்ளிட்டு 17 நவரத்தின பொதுதுறை பங்குகளை 51% தனியார் வாங்கிட தளர்த்தி உள்ளது)

இந்துத்துவா அமைப்புகள் முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்றன. மறு மதமாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லீம் சமூகத்திடம் அச்சத்தையும், பாதுகாப்பின்மையும் தோற்றுவிக்கின்றன. கிறித்துவ தேவாலயங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் டெல்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறின. முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார பின்தங்கிய நிலைமையும், சர்ச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மகாராஷ்ராவில் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்டு வந்த 5% இட ஒதுக்கீடு ரத்து செய்துவிட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்ராவிலும், அரியாணாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது’.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்த சுமார் ஒராண்டில் நடந்தேறியவையே. ஆனால் அதன் பின்னான ஒன்னரை ஆண்டுகளில் மேலே உள்ளதைவிட பன் மடங்கு கொடுமைகள் தலைவிரித்தாடி வருகின்றன.

இதிலிருந்து மக்களை திசைத் திருப்பவே அல்லது இந்தியாவின் இதயமான மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் காவி ஆட்சியை நிறுவிடவே தற்போது பொது சிவில் சட்டம், தலாக், சிசுக் கொலை, பழங்குடி பாதுகாப்பு, துல்லிய தாக்குதல் என எல்லாவற்றிக்கும் மேலாக மீண்டும் ராமர் கோவில் என பீடிகைப் போட்டு மக்களைத் திசை திருப்பி வருகிறது மத்திய பாஜக அரசு என்றால் அது மிகையல்ல.

மோடியாரின் பாஜகவின் பொதுசிவில் சட்டத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். அது குறிப்பாக இந்து  மதத்திற்கும், அதன் நீதி-சட்டத் திட்டங்களுக்கும் பொருந்துமா? கட்டுப்படுமா? மோடியார் பூஜிக்கும் மனு நீதியும், அவர்களது தொண்டரடி பொடியாளர்களும் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? பெண் சமத்துவத்திற்கு பெண்ணிய போராளி போல் குரல் எழுப்பும் மோடியும் பாஜகவும் இதையும் விவாதிக்க தயாரா? இந்த ஏமாற்று இரட்டைவேடம் இனி எடுபடப்போவதில்லை என்பதை மட்டும் பதிந்திடுவோமாக!

-பி.தங்கவேலு.

(ஆதாரம்: சாதி-மதம்-வர்க்கம்! –கே.வரதராஜன்; மற்றும் சிபிஐஎம் விசாகப்பட்டிணம் அஇமாநாட்டு தீர்மாணம்).
குறிப்பு: தீபாவளிக்கு முன் எழுதியது..! தீக்கதிருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment