Friday, 28 October 2016

போராட்டங்களை கொச்சைப்படுவதால் மட்டுமே
காவல்துறை மேன்மையடைந்து விடுமா?
தூக்கம் கடிந்து செயல்என்ற தலைப்பில் தமிழகத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவரும், இந்நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் 21.10.16 தினமணியில் ஒரு கட்டுரைத் தீட்டி உள்ளார். கட்டுரையின் முற்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றின் வீரதீர செயல்களை புகழ்ந்துள்ள இவர், அந்தளவுக்கான பணியில் ஈடுப்பட்டு வரும் காவல்துறைக்கு அந்தளவுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என பதிவிட்டு உள்ளார். அதைக்கூட புரிந்துக் கொள்ள முடிகிறது. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகர்களின் உரிமை.

ஆனால் பிற்பகுதியில் தமிழக காவல்துறையின் அதன் பணிகளை, மன அழுத்தங்களை பதிவு செய்ய முற்படும்போது, நாட்டில் நடக்கும் மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை அதன் வீச்சுகளை கொச்சைப்படுத்தும், அதனால்தான் காவலர்கள் தற்கொலை நேரிடுகிறது என திசைத்திருப்பும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளார். அதோடு அதிமுக முதல் அமைச்சரின் புகழ் பாடி தனது அதிமுக மீதான விசுவாசத்தைக் காட்டி உள்ளார். அது அவரது விருப்பம். ஆனால் அதற்காக காவல்துறையின் ஆடர்லி முறைக்கு வக்காலத்து வாங்குவதுபோல் முதல் அமைச்சர் புகழ் பாடுவதேன் என்ற வினா எழுவது ஒருபக்கம். இன்னொரு பக்கம்

எதற்கெடுத்தாலும் போராட்டம். சமீபத்தில் காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பல அரசியல் கட்சிகள் களமிறங்கின. அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தேர்ந்தெடுத்த இடம் ரயில் தண்டவாளம். தண்டவாளத்தில் இடையே கற்களுக்கு பஞ்சமில்லை. ஒரு பிரச்சனை ஏற்பட்டால் போலீசோடு மோதுவதற்கு கற்கள் தயாராக இருக்கும். அதனால் தான் எக்காரணம் கொண்டும் ரயில் மறியலுக்கு அனுமதி அளிப்பதில்லை. ஆனால் தடையை மீறினால்தான் போராட்டக்காரர்களுக்கு திருப்தி

சட்ட ஒழுங்கு நேர்வுகளில் போராட்டத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும் காவல்துறை போராட்டக்கார்களின் எதிர்ப்பைத் தாங்கி கொள்ள வேண்டும். வசவுகளை கேட்டுக்கேட்டே செவி மரத்து விடுகிறது. அதனால் தானோ என்னமோ பொத்தி வைத்த உணர்ச்சிகள் சில சமயம் எரிமலையாக வெடிக்கிறது. மனநிலை தொய்வு அடையும் போது பொறுக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

காவலர்கள் உறங்காமல் பணி செய்தால் சமுதாயம் அமைதியாக உறங்க முடியும். வீட்டிலுள்ளோர் கண் விழிக்கும் முன்னரே வெளியேறி அவர்கள் கண்ணுறங்கும் வேளையில் வீடு திரும்பும் தமிழக காவல் பணி சுமை நிறைந்தது.’ ‘அடுத்த வேளை உணவு எங்கு கிடைக்கும் என்ற உறுதி இன்றி கிடைத்ததை சாப்பிட்டு, கொடூரங்களையே பார்ப்பதால் வெறுப்புக்கும் கோபத்திற்கும் உள்ளாகி வியாதிகள் தான் எப்போதும் துணை என்று வாழும் காவலர்களின் துயர் துடைக்கும் தாய் தமிழக முதலமைச்சர்

மகாபாரதப் போரில் அதர்மத்தை அழிப்பதற்காக கண்ணன் பழி ஏற்று பாண்டவர் வெற்றிக்கு வழி வகுத்தான். சமுதாயத்தில் நீதியை நிலை நாட்ட பல நேர்வுகளில் காவல்துறை பழியை சுமக்க வேண்டியிருக்கிறது. பழி சுமந்தாலும் அதர்மத்தை அழித்து அமைதி காத்த ஆறுதல்தான் ஒரு காவலர் பணியில் மேலும் பயணிக்க வைக்கும் உந்து சக்தி’ ‘கண்ணன் வஞ்சன் என்றால் காவலனும் வஞ்சன்தான். வஞ்சித்து கயவர்களை அடக்குவதில் காக்கிச் சட்டைக்காரன் ரொம்ப கெடிக்காரன்

மேலே அவர் உதிர்த்துள்ள வார்த்தைகளை பார்த்தீர்களா? எதற்கெடுத்தாலும் போராட்டம் என போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார். போராடுவது நம் நாட்டின் அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை. போராடுபவர்கள் விளையாட்டுக்கு போராடுவதுபோல் கூறுகிறார். இவரே குறிப்பிடுவதுபோல் கடைசி கட்ட ஆயுதமாகத்தான் போராட்டம் செய்ய நேர்கிறதே தவிர போராட்டமே தொழிலாக கொண்டு யாரும் செயல்படுவதில்லை.

18.10.16 அன்றுகூட நானும் கலந்துக் கொண்ட ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளுமுல்லு ஏற்பட்டது. தடியடி நடந்து. காவல்துறையினரையின் வசவுக்கு பஞ்சமில்லை. சிபிஐ மாவட்டச் செயலாளர் காவல்துறையின் செயல்பாடுகளால் இடதுகால் மணிக்கட்டில் விரிசல் ஏற்பட்டு விழுந்து விட்டார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக தான் மறியல் போராட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட தலைவர் காவலர் வசவுகளால் அர்ச்சிக்கப்பட்டார். தண்டவாளத்தில் அமர்ந்தோம். ரயில் என்ஜின் மீது நின்றோம். இதெல்லாம் ஆசையின் அடிப்படையிலா? .நடராஜன் குறிப்பிடுவதுபோல் தண்டவாளத்தில் கிடக்கும் ஜல்லிகள் எங்களைப் பார்த்து சிரித்தனவே ஒழிய, நாங்கள் அதை சீந்தவே இல்லை.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் விதி. இவர் இதை புரிந்தாரா? தெரியவில்லை. இவர் தற்போது ஒரு அரசியல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, இந்த போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்க்காமல், இந்த போராட்டத்திற்கு யார் காரணம் என்றதையும் குறிப்பிடாமல் போராட்டத்தைக் குறை கூறுகிறார். காவலர்களுக்காக கண்ணீர் சிந்தி, காவிரிக்கு கண்ணீர் சிந்தும் போரை எள்ளி நகையாடுகிறார். காவலர்கள் மீது அனுதாப அலையை உருவாக்க முயற்சிக்கிறார். இறுதியில்அம்மாபுகழ் பாடுகிறார். இது என்ன வகை மகாபாரதம் என தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற உத்திரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசு அமைத்திருந்தால், தமிழகத்தில் இந்த போராட்டங்களே நடந்திருக்காது. இதை இவர் வசதியாக மறைத்துவிட்டார். காவிரிக்காக அதிமுக மட்டுமே போராடும் உரிமை பெற்றிருக்கிறது போலும். பெங்களூரு தீர்ப்பை ஒட்டி நடந்த மகாபாரதம்போல் அதிமுக தனது சக்தியை பயன்படுத்தி, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்திருந்தால் ஒரு நொடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும். அதை குறை கூற ஆ.நடராஜ்க்கு தைரியம் உண்டா? அதையெல்லாம் விட்டுவிட்டு போராட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் தண்டவாளம் என கிண்டலடிப்பது எங்ஙனம் நியாயம்? தர்மம்? இதுதான் அதர்மத்திற்கு எதிரான தர்மப்போரா?

நான் மேலே குறிப்பிட்டதைப் போல், அவ்வளவும் நடந்த பிறகும் மக்கள் நலக்கூட்டணி தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் தண்டவாளத்தில் கற்கள் கிடப்பது தெரியவே இல்லை. ஒருவேளை இந்த கட்டுரையை முன்னமே எழுதியிருந்தால், அதை படித்திருந்தால் இவரின் ஆசை ஒருவேளை நிறைவேறி இருக்கலாம். ஒரு ஓய்வு பெற்ற உயர் காவல் பொறுப்பில் இருந்த பொறுப்புள்ள காவல் அதிகாரி சொல்லும் சொல்லா இது? எழுதும் எழுத்தா இது? இம்மாதம் 17,18 தேதிகளில் திமுக, மக்கள் நலக் கூட்டணி மற்றும் விவசாயிகள் நடத்திய இந்த 48 மணி நேர மறியல் போராட்டத்தில் எங்காவது இவ்வண்ணம் நடந்திருக்குமா? எதற்காக இப்படி பிதற்றுகிறார்? இதன்மூலம் என்ன சொல்ல விளைகிறார்? ஒருவேளை அவ்வண்ணம் செய்திருக்க வேண்டும் என்கிறாரா?

ஆக மக்கள் நடத்தும் பல போராட்டங்களில் கல் பறப்பது யாரால் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் நமது நன்றியை உரித்தாக்கிக் கொள்வோமாக.

காவலர் பணி கடுமையான பணி என்பதை மறுப்பதற்கில்லை. இருவேறு கருத்தும் இல்லை. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜனநாயக உரிமைகளும் இவர்களுக்கு வழங்க வேண்டும். எட்டு மணி நேர வேலை; எட்டுமணி நேர உறக்கம்; எட்டு மணி நேர ஓய்வு இவர்களுக்கு அவசியம் வேண்டும். இந்த உரிமை உலக மாந்தர்களுக்கு சும்மா கிடைத்தா? எந்த போராட்டத்தை இவர் கொச்சைப் படுத்துகிறாரோ அந்த போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர் தியாகம் மூலம் உலக மாந்தர்கள் பெற்று உள்ளனர். இன்றைக்கும் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கம் இருக்கிறதென்றால் அது கம்யூனிச இயக்கமே. அதை மேற்கு வங்கத்தில் சங்கம் அமைத்து கொள்ளும் உரிமை ஆர்டலிக்கு வேட்டு வைத்தது உள்ளிட்டு அனைத்து உரிமையும் வழங்கியதை வரலாறு பேசும்.

காக்கி உடைக்குள் குமுறும் நெஞ்சங்கள் என்று கர்ஜித்தவர் மறைந்த மார்க்சிய போராளி பி.டி. ரணதிவே. தமிழகத்தில் அன்று சங்கம் கேட்டு போராடிய நைனார்தாஸ் உண்ணாவிரதத்தை ஓடோடி ஆதரித்தவரும், சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்தவரும் தமிழகத்தின் மார்க்சிய தவப்புதல்வன் ஆர்.உமாநாத். இப்படிப்பட்ட வீர வரலாறுகளை எல்லாம் மறைத்துவிட்டு, அல்லது மங்கவிட்டு தற்போதுஅம்மாபுகழ் பாடி, கெஞ்சி பெறுவதுதான் மகாபாரதமா? அடிமையாக இருப்பதும், ஆர்த்தெழுந்து போரிடுவதும் அவரவர் உரிமை; அதற்காக போராட்டங்களை கொச்சப்படுத்துவதும், அதை கொடூரச்செயலாக சித்தரிப்பதும் என்ன வகை மகாபாராதம்?

பார் புகழும் மகாபாரதம் தொட்டு, மனித சமுதாயம் கடந்து வந்த பாதை முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகள் என்கிறது மார்க்சியம். மார்க்சீயத்தை மறுதளிக்கும் கூறு இக்கட்டுரை பதிவுகளில் இருப்பது ஏற்க தக்கதல்ல. போராட்டம் மட்டுமே எல்லோருக்கும் புதுவாழ்வை பெற்றுத்தரும் என்பதை மட்டும் இங்கே ஆ.நடராஜ் போன்றோருக்கு பதிவிடுவோம்.

காவல்துறையை ஆளும் கட்சிகள் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டதே இல்லையா? லாக்-அப் மரணம் உட்பட காவல்துறையின் மனித உரிமை மீறல்களுக்கு அளவு உண்டா? காவல்துறை குறித்த ஆளும் வர்க்கத்தின் அணுமுறை மாறும் போதுதான், அது உண்மையில் மக்களுக்கான காவல் துறையாக இருக்கும்.

-பி.தங்கவேலு

இது எடிட் செய்யப்பட்டு, 23.01.16 தீக்கதிரில் பிரசுரம் ஆனது. நன்றி தீக்கதிருக்கு..!

No comments:

Post a Comment